உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் டாக்ஸி ஓட்டுநரை பெண் ஒருவர் கன்னத்தில் தொடர்ச்சியாக அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைராலனது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான அந்த வீடியோவில், பெண் ஒருவர், டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை வண்டியில் இருந்து கீழே இழுத்து வந்து, 22 முறை கன்னத்தில் அறைகிறார். மேலும் தடுக்க வந்த மற்றவர்களையும் மிரட்டி தாக்க முற்படுகிறார்.
அதேவேளையில் பெண் போலிஸை கூப்பிடும்படி வாகன ஓட்டுநர் கதறுகிறார். இந்தச் சம்பத்தின் போது ஓட்டுநரின் செல்போனை பறித்து தரையில் அடித்து உடைத்துள்ளார் அந்தப் பெண். இந்த பிரச்சனையால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நடுரோட்டில் வாகன ஓட்டுநரை அறைந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரி #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது. இதனையடுத்து லக்னோ போலிஸார் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாலை விதிகளை மதிக்காமல் வந்ததாலும், தன் மீது வாகனத்தை மோதியதாலும் அடித்ததாக அந்தப் பெண் தெரிவித்திருகிறார். இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி லக்னோ போலிஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த சிசிடிவி காட்சியில், சிவப்பு விளக்கு எரிந்த போதும் 20ம் மேற்பட்ட வாகனங்கள் நிற்காமல் சிக்னலை கடந்து செல்கிறது. அப்போது அந்த சிக்னலை அந்தப் பெண் சாலையின் மறுபக்கம் வர முக்கால்வாசி சாலையைக் கடந்த நிலையில், அந்த டாக்ஸி பெண்ணை மோதுவது போல் வந்து நிற்கிறது. (அந்த பெண் வாகனம் மோதி கிழே விழுந்ததாகத் தெரியவில்லை. )
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், டாக்ஸியின் கதவைத் திறந்து ஓட்டுநரின் செல்போனை எடுத்து சாலையில் போட்டு உடைத்துவிட்டு, அவரைத் தாக்கத் தொடங்குகிறார்.
சாலை விதிகளை மதிக்காமல் செல்ல முயற்சித்த ஓட்டுநரின் செயல் எவ்வளவு தவறானதோ, அதனைவிட கூடுதல் தவறு காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் தானாகவே தண்டனை வழங்கியது என்று நெட்டிசன்கள் கருத்துக் கூறுகின்றனர். வாகன ஓட்டுநர் தவறுக்கு அபராதம் கட்டினால் கூட போதுமானது. ஆனால் அந்தப் பெண் அடித்தது வன்முறை எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பெண் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர். அதேவேளையில், போக்குவரத்து நெரிசல் இருக்கும்போது வாகனங்களை சீர்படுத்தி அனுப்பவேண்டிய போக்குவரத்து போலிஸார் மீறிச் சென்ற வாகனங்களை தடுக்காததே இந்த சம்பவத்திற்கு முதல் காரணம் எனவும் பதிவிட்டுள்ளனர்.