தெலங்கானாவில் எம்.பி.ஏ பட்டதாரிகளான இரண்டு நண்பர்கள், தங்களது வருமானத்திற்கு மீறி ஆடம்பரமாகச் செலவு செய்து வந்துள்ளனர். இவர்கள் மதுபோதைக்கும் அடிமையாகியுள்ளனர். இதனால் தங்களின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இருவரும் தவித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கிராமப்புறங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று, அங்கு தனியாக வரும் பெண்களைக் குறிவைத்து அவர்கள் கழுத்திலிருந்த செயின்களை பறித்து வந்துள்ளனர்.
பிறகு, இதை இவர்கள் ஒரு தொழிலாகவே மாற்றி அடிக்கடி இப்படியான சம்பவங்களைச் செய்து வந்துள்ளனர். இதையடுத்து கிராமப்புறங்களில் இருந்து போலிஸாருக்கு அதிகமாக செயின் பறிப்பு புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து போலிஸார் கிராமப் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக இந்த பட்டாதரி இளைஞர்கள் போலிஸார் இருப்பதை கண்டு அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனால் இவர்கள் மேல் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். பிறகு அவர்களிடம் நடத்திய விசாரணையில், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது இவர்கள்தான் என்பது தெரியவந்தது.
பின்னர் இரண்டு பட்டதாரி இளைஞர்களையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், சொகுசாக வாழ ஆசைப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று தங்கச்சங்கிலிகள் ஆகியவற்றை போலிஸார் கைப்பற்றினர். மேலும் இவர்கள் வேறு எந்தெந்தப் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.