மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் பெயரை அதானி என பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தின் பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் ஏழு விமான நிலையங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு அதானி குழுமத்திடம் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதேபோல், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் வழங்குவதை எதிர்த்து கேரள அரசு வழக்கு தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய பா.ஜ.க அரசு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு தாரைவார்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தைக் கடந்த ஜூன் 13ஆம் தேதியிலிருந்து அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி என்ற பெயரை மாற்றி அதானி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கினர். மேலும் விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
மும்பை விமான நிலையத்தில் அதானி பெயரை முன்னிலைப்படுத்துவது சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் செயல் என சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.