கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மையை பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று தேர்வு செய்யப்பட்டார். இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளார்.
224 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்.
குமாரசாமியின் ஆட்சி ஓராண்டு கூட நீடிக்கவில்லை. பா.ஜ.கவின் திரைமறைவு பேரங்களால், 21019ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
ம.ஜ.த மற்றும் காங்கிரஸை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.வுக்கு தாவியதைடுத்து முதலமைச்சராக எடியூரப்பா தலைமையில், பா.ஜ.க ஆட்சி அமைந்தது.
இந்நிலையில், கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக நேற்று முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக ஆளுநரிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், இன்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா பா.ஜ.க மேலிட பார்வையாளர்களான ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பசவராஜ் பொம்மை பெயரை சட்டசபை குழு தலைவராக எடியூரப்பா முன்மொழிய, மூத்த அமைச்சர் கோவிந்த கார்ஜோல் வழிமொழிந்துள்ளார்.
இதையடுத்து, கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பசவராஜ் பொம்மை நாளை முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசுவராஜ் பொம்மை எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை, சட்டத்துறை போன்ற முக்கியத் துறைகளை தன்வசம் வைத்திருந்தார் பசவராஜ் பொம்மை. இவரது தந்தை எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளார்.
1960ஆம் ஆண்டு பிறந்த பசவராஜ் பொம்மை, 2008ஆம் ஆண்டுதான் பா.ஜ.கவில் சேர்ந்தார். பசவராஜ் பொம்மை இருமுறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.