கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஏன் வேகப்படுத்தப்படவி்ல்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்களும், ஆய்வாளர்களும் எச்சரித்து வரும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர் இந்திய மக்கள்.
இந்தியாவில் தற்போது வரை 43,31,50,864 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒன்றிய மோடி அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்வி்ட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். #WhereAreVaccines என்ற ஹேஸ்டேக்கோடு அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “ இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திருந்தால், தடுப்பூசி செலுத்தும் நிலை இப்படி இருந்திருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவில், “நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது. நாட்டில் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு கிடைக்கவில்லை.
கொரோனா 3-வது அலையைத் தடுக்க நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவேண்டும்.
அதற்கு நாள்தோறும் நாட்டில் 93 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 36 லட்சம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது ஏறக்குறைய கடந்த ஒருவாரத்தில் நாள்தோறும் 56 லட்சம் டோஸ் தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்படுகிறது.
24ம் தேதி மட்டும் நாட்டில் 23 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 69 லட்சம் தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.