இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடவேண்டிய சூழல் ஏற்படலாம் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா வைரஸ் வேகமாக உருமாறி வருவதால் அடுத்தடுத்த பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
இந்தியாவில் மூன்றாம் அலை பரவலுக்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா, “இந்தியாவில் உருமாற்ற கொரோனாவின் வீரியம் அதிகரிப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளோடு நிறுத்திவிடாமல் மூன்றாவது டோஸ் போடவேண்டிய தேவை ஏற்படலாம்.
மூன்றாவது பூஸ்டர் டோஸ் ஏற்கனவே சோதனையில் இருக்கிறது. மக்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிறகே பூஸ்டர் ஷாட்கள் செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதன் தரவுகள் செப்டம்பரில் வெளியாகும். ஸைடஸ் காடில்லா நிறுவனத்தின் தடுப்பூசி சோதனையும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மீது நடத்தப்பட்டது. அதன் தரவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஸைடஸ் காடில்லா தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களிலோ அல்லது செப்டம்பரிலோ குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.