உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.
லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினர். அப்போது அவரது மகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.
அந்த கிராமத்தினர் மிகவும் பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த், அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. இந்திய உடைகளைத்தான் அணியவேண்டும்' எனக் கூறியுள்ளனர். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறுமியை சுவற்றில் மோதியும், பலமாக தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கிச் சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசியுள்ளனர். அவரது உடல் மேம்பாலத்தின் கிரில்லில் தொங்கியபடி கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலிஸார் விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்துள்ளனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.