இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடே ஊரடங்கால் முடங்கி மெல்ல மெல்ல தொற்றுப்பரவல் குறைந்த பிறகு மீண்டு வருகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஆந்திராவில் உள்ள கிராமத்தில் ஒரு குடும்பமே தங்களை கடந்த 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோல் மண்டலில் உள்ள கடாலி என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஜான் பென்னி (52) என்பவரும் அவரது மனைவி ருத்தம்மா (45) சினாபாபு (29) மகன், ராணி (32), காந்தமணி (30) மகள்களும் இந்தியாவில் கொரோனா தொற்று பரவி முழு ஊரடங்கு அறிவித்ததுமே வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் ஜான் பென்னியும் அவரது மகனும் வெளியேச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு எவரிடமும் பேசாமல் வீடு வந்து சேர்ந்துவிடுவார்களாம். அக்கம்பக்கத்தினர் எவ்வளவோ எடுத்துரைத்தும் கேட்காமல் இருந்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் அண்மையில் முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஜான் பென்னிக்கு வீட்டு மனை பட்டா கொடுப்பதற்காக கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் அவரை அணுகியிருக்கிறார்கள். அப்போதும் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது என திண்ணமாக கூறியிருக்கிறார்கள்.
இதனையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள். கூடவே சுகாதாரத்துறையினர் சென்றிருக்கிறார்கள். போலிஸார் வந்து கூறியும் ஜான் பென்னி குடும்பத்தினர் கேட்காததால் கதவை உடைத்து உள்ளேச் சென்ற போலிஸார் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா பயத்தால் வீட்டுக்குள்ளேயே ஒன்றரை ஆண்டுகளாக முடங்கியதால் பெண்கள் மூவரும் மிகவும் மெலிந்த நிலையில் உடல் நலிவுற்று இருந்திருக்கிறார்கள். உடனடியாக அவர்களை மீட்டு காக்கிநாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.