இந்தியா

கடும் எதிர்ப்பால் மாற்றி அமைக்கப்படும் கலாச்சார ஆய்வுக் குழு.. மதுரை MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

இந்தியாவின் 12000 ஆண்டு கால பண்பாட்டை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவுக்கு எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இக்குழு மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார்

கடும் எதிர்ப்பால் மாற்றி அமைக்கப்படும் கலாச்சார ஆய்வுக் குழு.. மதுரை MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் 12,000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் கடந்தாண்டு அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடி, சிறுபான்மையினர், தென்னிந்தியர்க்கு இடம் அளிக்கப்படாததைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், அக்குழு மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அக்குழுவின் உள்ளடக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி "அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு பன்மைத்துவத்தை பிரதிபலிக்கவில்லை. தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமுகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

ஒன்றிய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை... விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா?” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

செப்டம்பர் 23, 2020 அன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 எம். பிக்கள் குடியரசுத் தலைவருக்கு இக்குழுவை கலைக்குமாறு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், “தமிழறிஞர்கள் - தென்னிந்தியர்கள் - வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மைனாரிட்டிகள் - பட்டியலினத்தவர் இடம்பெற பிரதமர் நரேந்திர மோடி வகை செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளன்று சு.வெங்கடேசன் எ‌ம்.பி இதுகுறித்த கேள்வியை எழுப்பியிருந்தார். கடும் விமர்சனத்திற்கு ஆளான அந்த குழு இன்னும் நீடிக்கிறதா? கூடுகிறதா? அக்குழுவை கலைத்து புதிதாக பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

கடும் எதிர்ப்பால் மாற்றி அமைக்கப்படும் கலாச்சார ஆய்வுக் குழு.. மதுரை MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!

இந்தக் கேள்விக்கு ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில் "இக்குழு 2016ல் அமைக்கப்பட்டது. ஜனவ‌ரி 3, மே 2 - 2017 தேதிகளில் இரண்டு முறை கூடியுள்ளது. தற்போது இக்குழுவை மாற்றி அமைக்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும் போது அதன் உறுப்பினர் உள்ளடக்கம் பன்மைத்துவ நோக்கில் அமைவதற்கான எல்லா ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும்" என்று தெ‌ரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடெசன் எம்.பி, "இது 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு எழுப்பிய குரலுக்கு கிடைத்துள்ள வெற்றி. ஆனாலும் அரசின் நோக்கம் குறித்து கவனமும் பரந்த விவாதமும் தேவைப்படுகிறது. வரலாற்று திரிபு, பன்மைத்துவம் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுமையுமான வரலாற்று ஆய்வாளர்களின் கடந்த கால, நிகழ்கால அறிவியல் பூர்வமான பங்களிப்புகள் சிதைவுறாமல் பாதுகாப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories