தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்காக நேற்று டெல்லி சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன், பதவி ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கொள்ளும் இரண்டாவது டெல்லி பயணம் இதுவாகும்.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக குடியரசுத் தலைவரை இன்று சந்தித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரிடம் மனோகர் தேவதாஸ் எழுதிய 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை மாகாண சட்டசபை அமைந்து நூறாண்டுகள் ஆவதையொட்டி கொண்டாடப்படும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவும், சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்துவைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
மதுரையில் கலைஞர் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை எட்டியதை நினைவுகூரும் வகையில் கடற்கரைச் சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன்.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கொரோனா மூன்றாம் அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.