ராகுல்காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் உளவு பார்த்த மோடி அரசு.
ஏற்கனவே, 40 ஊடகவியலாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசியல் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் செல்போன் உரையாடல்கள், வாட்ஸ்-அப் தகவல்கள், மெயில் என அனைத்துமே PEGASUS மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தேர்தல் வியூக கட்டமைப்பாளர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரது எண்களும் உளவு பார்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டதொடரில் நடந்த விவாதத்தில், இப்படி ஒரு விஷயம் நடக்கவேயில்லை. ஒன்றிய அரசு அப்படி யாருடைய எண்ணையும் உளவு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்த 1 மணி நேரத்திற்குள்ளாக இந்தத் தகவல் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.