இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியானது.
மேலும் பல சமூக செயற்பாட்டாளர்களின் எண்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் செல்போன் தரவுகளும் வேவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பா.ஜ.கவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, 'மோடியின் அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் மற்றும் லண்டன் கார்டியன் ஆகிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இது உண்மை என்றால் பட்டியலை நான் வெளியிடுவேன்’ என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது, இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த பிரச்சனை குறித்து இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்றக் கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். மேலும் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி, இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா இல்லையா என்பது பற்றி கூற வேண்டும். ஒட்டுக்கேட்பு குறித்து உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கினால் நல்லது. இல்லாவிடில் அமெரிக்கா வாட்டர் கேட் ஊழல் போல் தலைவலிதான்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சுப்பிரமணிய சுவாமி, ஒட்டுக்கேட்பு பிரச்சனை குறித்து உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு யார் நிதியளித்தது என்றும் தெரிவிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.