கொரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் ஊரடங்கு காரணமாக கடுமையான பாதிப்பிற்குள்ளான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை எளியோர் என அனைவருக்கும் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட்.
இதன் காரணமாக மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாகவே வலம் வரத் தொடங்கினார். சமூக வலைதளங்களிலும் அவரை புகழாத நாளில்லை. இருப்பினும் அவரது செயல்பாடுகளின் பின்னணியில் பாஜகவின் அரசியல் இருந்ததாகவும், பாஜகவின் இசைவுக்கு ஏற்பவே சோனு செயல்பட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சோனு சூட் புரிந்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ரசிகர் ஒருவர் 1,200 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வெறும் காலில் சைக்கிளிலேயே பயணம் செய்து மும்பையில் உள்ள அவரை சந்திருக்கிறார்.
தன்னை சந்திக்க வந்தவரை வரவேற்ற சோனு சூட் அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1200 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்தவருக்கு வெறும் செருப்பை மட்டும்தான் சோனு சூட் கொடுத்து அனுப்பினாரா என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக ட்விட்டரில் உதவி கேட்டால் உடனே செய்வதாக சொல்லி, தவறான முகவரியை கூறினால் கூட தேவையான பொருட்கள் அனுப்பிவிடப்பட்டது என சோனு சூட் ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுவும் நெட்டிசன்களிடையே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.