ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் தேவையா? என வழக்கு ஒன்றில் இன்று காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஹரியாணா மாநில போலிஸார் நூறு விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், சரிஸா மாவட்டத்தில் துணைச் சபாநாயகர் ரன்பீர் கங்வா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விவசாயிகள் அவரின் காரி வழி மறித்து, வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, துணைச் சபாநாயகரின் கார் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலிஸார் சம்யுக்தா கிசான் மோர்சா தலைவர்கள் சிங், பிரஹலாத் சிங் உள்ளிட்ட நூறு விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்று காலையில் தான் தேசத் துரோக வழக்கு தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசத் துரோக வழக்கு தேவையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டரில்," உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.