இந்தியா

பெங்களூரு வழக்கறிஞரை மிரட்டி அசிங்கப்பட்ட உத்தர பிரதேச அரசு... பொய்யும் புரட்டும்தான் பா.ஜ.க மாடலா?

பெங்களூரில் உ.பி பா.ஜ.க அரசின் விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது குறித்த புகைப்படத்தை ட்வீட் செய்ததற்காக வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்து அசிங்கப்பட்ட பா.ஜ.க அரசு.

பெங்களூரு வழக்கறிஞரை மிரட்டி அசிங்கப்பட்ட உத்தர பிரதேச அரசு... பொய்யும் புரட்டும்தான் பா.ஜ.க மாடலா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே உத்தர பிரதேச அரசின் விளம்பர பலகை அமைப்பட்டிருந்ததை புகைப்படம் எடுத்து ட்வீட் செய்ததற்காக வழக்கறிஞருக்கு எதிராக போலிச் செய்தியை பரப்பியதற்காக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உத்தர பிரதேச அரசு மிரட்டல் விடுத்தது.

ஆனால், விளம்பர பலகை அமைக்கப்பட்டிருந்தது உண்மை எனத் தெரியவந்த நிலையில், அதை அகற்றிவிட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது உ.பி. பா.ஜ.க அரசு.

பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷிஷிரா ருத்ரப்பா கடந்த திங்கட்கிழமையன்று, பெங்களூரு விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த உத்தர பிரதேச அரசின் விளம்பர பலகையின் புகைப்படத்தை ட்வீட் செய்தார்.

அதோடு, ‘உ.பி. தேர்தலுக்கான பிரச்சாரம் கர்நாடகாவில் தொடங்கியுள்ளது’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டிருந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு அருகே இதேபோன்ற விளம்பர பலகை அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் பகிர்ந்தார்.

பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் ஆதித்யநாத் படங்கள் இடம்பெற்றுள்ள அந்த விளம்பர பலகையில் நான்கு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதாகவும் உத்தர பிரதேசம் வேலைவாய்ப்பில் நாட்டிலேயே முதல் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் ஷிஷிர் சிங் அவசர அவசரமாக இந்த ட்வீட்டை குறிப்பிட்டு போலிச் செய்தி என்று தெரிவித்தார்.

மேலும், “போலி செய்திகளை பரப்ப வேண்டாம். இதுபோன்ற விளம்பரம் கர்நாடக மாநிலத்தில் எங்கும் கொடுக்கப்படவில்லை.” என உ.பி காவல்துறையை டேக் செய்து பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த உ.பி சைபர் போலிஸ், இந்த ட்விட்டர் கணக்கை வைத்திருப்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. மேலும், அம்மாநில அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் ட்விட்டர் பக்கமும் இது ‘Fake news' எனத் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த விளம்பர பலகைக்கு அருகே பெங்களூரு விமான நிலைய டிரக் நிற்கும் வீடியோவையும் வழக்கறிஞர் ஷிஷிரா ருத்ரப்பா பகிர்ந்து, இந்த விளம்பர பலகை கர்நாடகாவில் இருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும், ட்வீட்டை நீக்குமாறு உ.பி அரசின் மக்கள் தொடர்பு இயக்குநரிடம் ட்வீட்டை நீக்குமாறு கோரினார்.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பா.ஜ.க அரசு, பெங்களூரில் அமைக்கப்பட்ட விளம்பர பலகையை அகற்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, ஷிஷிரா ருத்ரப்பா பகிர்ந்துள்ள வீடியோவில், அந்த விளம்பரம் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்த ஷிஷிரா ருத்ரப்பா, “எனது ட்வீட்டால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விளம்பரத்தைப் பார்த்தேன், அதன் படத்தைப் பகிர்ந்து கொண்டேன். இந்த விளம்பரம் டெல்லி, மகாராஷ்டிராவில் வைக்கப்பட்டுள்ளதாக உ.பி. அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பெங்களூரில் தவறுதலாக வைக்கப்பட்டு அகற்றப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசின் விளம்பரம் பெங்களூரில் அமைக்கப்பட்டிருந்த படத்தைப் பகிர்ந்ததற்காக வழக்கறிஞருக்கு எதிராக பொய்ச் செய்திக்கான சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த உ.பி பா.ஜ.க அரசின் செயல் ட்விட்டரில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

உண்மையான தகவலை பொய்ச் செய்தி எனக் குறிப்பிட்டு அசிங்கப்பட்டுள்ளது பா.ஜ.க அரசு. உத்தர பிரதேச மாடல் என்பதே பொய்கள் மற்றும் அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டதுதான் எனப் பலரும் பா.ஜ.க அரசை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories