ஒருவர் சாராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவார்கள். ஆனால் ராஜஸ்தானை சேர்ந்த புர்காரம் என்பர் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் தூங்கிக் கொண்டேதான் இருப்பார். இதனால் இவரை எல்லோரும் கும்பகர்ணன் என அழைக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், நாகூரைச் சேர்ந்தவர் புர்காரம். இவருக்கு Axis Hypersomnia எனும் அரியவகை நோயால் தாக்கியதால் இவர் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பார். இவர் தூங்க ஆரம்பித்ததால் 25 நாட்களுக்குப் பிறகுதான் எழுந்துகொள்வார். மீண்டும் தூங்கினால் எழுந்துகொள்ள 25 நாட்கள் ஆகும். இப்படி வருடத்தில் 300 நாட்களைத் தூக்கத்திலேயே கழித்து வருகிறார் புர்காரம்.
இப்படி ஒரு விநோத நோயால் 25 ஆண்டுகளாக புர்காரம் அவதிப்பட்டு வருகிறார். இவர் நடத்தி வரும் பலசரக்குக் கடை மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். இந்த நோய் தாக்கிய ஆரம்பத்தில் புர்காரம் 5 முதல் 7 நாட்கள் வரை தூங்கிவந்தார். பின்னர் 2015ம் ஆண்டுகளுக்குப் பிறகு 15 நாட்கள் ஆனது. தற்போது அது 25 நாட்களாக அதிகரித்து விட்டது. இந்த நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க புர்காரம் தூங்கும் நாட்களும் அதிகரித்து வருவதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த நோய் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "டி.என்.எஃப்-ஆல்பா எனப்படும் புரோட்டீன் மூளையில் ஏற்ற இறக்கத்தின் காரணமாக இப்படி ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் தூக்கத்திலிருந்து எழ முயன்றாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. அதேபோல். தூங்குவதற்கு ஒருநாள் முன்பு அவர் கடுமையான தலைவலியால் பாதிக்கப்படுவார். இது ஒரு விநோதமான நோய். இதை குணப்படுத்துவது கடினம்" எனத் தெரிவித்துள்ளனர்.
புர்காரம் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டார் என்பதால் அவரின் மனைவி தூக்கத்தில் இருக்கும்போதே அவருக்கு உணவு கொடுப்பது, குளிக்கவைப்பது என அன்றாட வேலைகளைச் செய்துகொண்டு, விரைவில் அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.