மகாராஷ்டிரா மாநிலம் மாலோகானில் உள்ள ஒரு மசூதியில் 2008ம் ஆண்டு செம்பட்பர் 29ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு வழக்கில், தற்போது போபால் தொகுதி எம்.பியாக உள்ள பா.ஜ.கவை சேர்ந்த பிரக்யாசிங் தாக்கூர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையின் போது, சக்கர நாற்காலியில் வந்த பிரக்யா சிங் தாக்கூர் தனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என கூறி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்குப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சக்கர நாற்காலியிலேயே வளம் வந்தார் பிரக்யா சிங் தாக்கூர். இந்நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் உற்சாகமாக கூடைப்பந்து விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் உள்ள சாகேத் நகரில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாக்கூர் சென்றுள்ளார். அங்கு சில விளையாட்ட வீரர்கள் மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த பிரக்யா சிங் தாக்கூர் உடனே அவர் விளையாடும் இடம் சென்று, பந்தை வாங்கி, கையால் அதை தரையில் அடித்துக் கொண்டே சென்று கூடையில் பந்தைப் போடுகிறார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறுகையில், “எம்.பி. பிரக்யா சிங் தக்கூர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அவர் கூடைப்பந்தை உற்சாகமாக விளையாடியதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒரு காயம் காரணமாக எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது என அவர் தெரிவித்திருந்தார்” என ட்விட்டரில் பதிவிட்டு, தக்கூர் கூடைப்பந்து விளையாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் எம்.பி. பிரக்யா சிங் தக்கூர் வழக்கு விசாரணைக்கு பயந்து சக்கர நாற்காலியில் சென்றுள்ளார் என்பது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.