மத்திய பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி தொங்க விட்டு உறவினர்களே தாக்கிய சம்பவம் நடந்த நிலையில், இதேபோன்று மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், பிபல்வா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவர் தங்களது உறவினர்களுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார்கள். இதனையறிந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்கள் இளம் பெண்களை ஆற்றங்கரையோரம் கடுமையாகத் தாக்கி சித்தரவதை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, குச்சிகளால் இரண்டு, மூன்று ஆண்கள் அடித்து சித்தரவதை செய்கிறார்கள். அப்போது அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போதும் விடாமல் அந்த கொடூரர்கள் அவளை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் ஜூன் 22ம் தேதி நடந்துள்ளது. இந்த வீடியோ பரவியதை அடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மேலும் ஒரு பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஏழு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று காட்டுமிராண்டித்தனம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் மாமியார் வீட்டை விட்டு வெளியேறி வந்ததார்காக அப்பெண்ணைப் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களே மரத்தில் கட்டி தொங்கவிட்டு கொடூரமாக தாக்கினர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக இளம் பெண்கள் மீது உறவினர்களே கொடூரமாக தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் வந்ததில் இருந்தே தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இவற்றை எல்லாம் தடுக்காமல் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேடிக்கை பார்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.