இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து பொதுமக்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது. அதில் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு ‘ஜைடஸ் காடிலா’ கொரோனா தடுப்பூசி தற்போது சோதனையில் மட்டுமே உள்ளது. அந்தத் தடுப்பூசிக்கு முறையான அனுமதி கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கைபேசியில் மெசேஜ் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போபாலை சேர்ந்தவர் ரஜத் டாங்க்ரே. இவருக்கு கடந்த 21ஆம் தேதி இரவு கைபேசியில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் அவரது 13 வயது மாற்றுத்திறனாளி மகனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து ரஜத் டாங்க்ரேவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் எப்படி தனது மகனுக்கு தடுப்பூசி போட்டதாக மெசேஜ் வந்தது என்று ஒன்றும் புரியாமல் குழம்பியுள்ளார்.
பின்னர்தான், தனது மகனுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு கடந்த வாரம் விண்ணப்பம் அளித்திருந்ததை நினைவுபடுத்தி, அந்தத் தரவுகளைக் கொண்டுதான் தற்போது தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது என்று கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இப்படி, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தும், அதனைச் செலுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள்; அரசின் இதர திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கே கொரோனா தடுப்பூசி போட்டுவிட் டோம் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. அண்மையில், சைனேந்திர பாண்டே என்ற நபரின் மொபைலுக்கு அவருக்குத் தொடர்பே இல்லாத மூன்று நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச பா.ஜ.க அரசு கடந்த 21ஆம் தேதி ஒருநாளில் 17.42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டதாக கணக்குக் காட்டியது. அன்றைய தினத்தில் தான் 13 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போட்டதாக மெசேஜ் வந்துள்ளது. எனவே அம்மாநில அரசு கூறும் புள்ளி விவரத்தில் குளறுபடி நடந்துள்ளது என்றும், தடுப்பூசி கணக்குகளை பொய்யாகக் காட்டிவருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.