நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை ஜூலை மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திட்டமிட்டதை விட ஒருவாரம் முன்னதாகவே மார்ச் மாதம் இறுதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
அதன் பிறகு தற்போது மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்களை தாக்கல் செய்து நிரைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்கட்சிகளைப் பொருத்தவரை கொரோனா இரண்டாம் அலையை ஒன்றிய அரசு கையாளத் தவறியது குறித்து விவாதிக்க வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
7 மாதங்களைத் தாண்டிய விவசாயிகள் போராட்டம், 100 ரூபாயைத் தாண்டியும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது, விலைவாசி உயர்வு, லட்சத்தீவு, காஷ்மீர் விவகாரம், ராமர்கோயில் நில மோசடி புகார் உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்ப தயாராகி வருகின்றனர்.