இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் நாடு சிக்கிப் பரிதவித்துக் கொண்டு வருகிறது. கொரோனாவை தடுப்பதில் ஒன்றிய பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி , Zimmedaar Kaun (யார் பொறுபேற்பது?) என்ற பிரச்சாரத்தை தற்போது முன்னெடுத்துள்ளார்.
அந்த வகையில், கொரோனாவை எதிர்கொள்வதில் பிரதமர் மோடி கோழையாகச் செயல்பட்டு வருவதாகப் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”பிரதமர் நரேந்திர மோடி தனது கடமையிலிருந்து பின்வாங்கிவிட்டார். ஒரு கோழையைப் போல் அவர் நடந்து கொண்டார். நமது நாட்டை அவர் வீழ்ச்சியடையச் செய்துவிட்டார்.
பிரதமருக்கு இந்தியர்கள் பற்றிய நினைவு முதலில் வருவதில்லை. அரசியல் பற்றிய நினைவுதான் முதலில் வருகிறது. பிரதமரிடம் இந்த பாதிப்புக்கெல்லாம் யார் பொறுப்பு என்று மக்கள் கேட்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
தொற்று நோய் தொடக்கத்தில் இருந்தே உண்மையை மறைக்கவும் பொறுப்புகளைச் சுருக்கிக் கொள்ளவுமே மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் விலைவாக இரண்டாவது அலை தாக்கியபோது அரசாங்கம் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
பிரதமரின் செயலற்ற தன்மையால் கொரோனா வைரஸ் மூர்க்கத்துடன் பரவி, சொல்லமுடியாத துன்பங்களை ஏற்படுத்திவிட்டது. அவர் தன் சொந்த இமேஜை காப்பாற்றச் செய்த முயற்சிகளை மக்கள்நலனில் காட்டியிருந்தால், இன்று தடுப்பூசித் தட்டுப்பாடு இருந்திருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.