தடுப்பூசி பதிவு, விநியோகம் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் மக்களைப் புரட்டியெடுத்த நிலையில், தற்போதுதான் தொற்று சீராகக் குறைந்து வருகிறது. ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும் என்று பேசிய பிரதமர், புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
அதன்படி கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்கும் என்றும், எனவே, தடுப்பூசிக்காக மாநில அரசுகள் இனி செலவழிக்கத் தேவையில்லை என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உரை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி கொள்கையை மாற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சுகாதாரத்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடியது என்று பிரதமரே குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி பதிவு, விநியோகம் உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.