ஹைதராபாத் பஞ்சாகுட்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், வம்சி கிருஷ்ணா என்பவர் கடந்த மே 9ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், மே 22ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனை நிர்வாகம், “ரூ.20 லட்சம் சிகிச்சை கட்டணம் செலுத்தினால்தான் உடலை தருவோம்” என உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. இதனால், ஆவேசமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து, நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, போராட்டத்தில் இருந்த உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும், “என் சகோதரனுக்கு மருத்துவர்கள் அதிகமான ஸ்டெராய்டு கொடுத்ததால் தான் உயிரிழந்துள்ளார்” என வம்சி கிருஷ்ணாவின் சகோதரி மருத்துவனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், வம்சி கிருஷ்ணாவின் உடலை உறவினர்களிடம் கட்டணம் ஏதுவும் வாங்காமல் ஒப்படைத்தது.
இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி வம்சி கிருஷ்ணாவின் உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.