பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, புதன்கிழமையுடன் (2021, மே 26 தேதியுடன்) 7 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், எதிர்க் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
‘குஜராத் மாடல்’ என்று பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வந்தது, கொரோனா மூலம் அம்பலப்பட்டு விட்டது என்று கடுமையாக சாடியுள்ளன. 7 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க.-வின் நிர்வாக படுதோல்வியை மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் காட்கில் பட்டியலிட்டு உள்ளார்.
‘2014-ஆம் ஆண்டு ‘குஜராத் மாடல் ஆட்சி’ என்றுகூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., கொரோனா பரவல் காரணமாக அம்பலமாகி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாத குஜராத் மாநிலத்தின் கையாலாகாத தன்மையை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது.
பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் சுடுகாட்டில் இடம் இல்லாமல் திறந்த வெளியில் இறுதி சடங்குள் செய்யப்படுவது, ஆற்றில் உடல்கள் வீசப்படுவது போன்ற சம்பவங்கள், சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளன.
கோவா மாநிலம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகளை சந்தித்து வருகிறது. பா.ஜ.க ஆளும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் நிலைமை இருண்டதாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு பா.ஜ.க முன்வைத்த ‘குஜராத் மாடல் ஆட்சி’ நாடு முழுவதுமே அம்பலப்பட்டு நிற்கிறது’ என்று ஆனந்த் காட்கில் விமர்சித்துள்ளார்.