இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் பலர் பெற்றோரையும், குடும்பத்தாரையும், நண்பர்களையும் இழந்து தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனாவால் தாயை இழந்த மகள் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், குடகு பதியைச் சேர்ந்தவர் பிரபா. இவர் கொரோனா பாதித்து மடிக்கேரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிறகு கடந்த 16ம் தேதி சிகிச்சை பலனின்றி பிரபா உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த பிரபாவுக்கு ஒன்பது வயதில் ஹிரித்திக்ஷா என்ற சிறுமி உள்ளார். கொரோனாவுக்கு அம்மாவை பறிகொடுத்த சிறுமி , தற்போது உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அதில் ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமி எழுதியுள்ள அந்த கடிதத்தில், “அம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் அம்மா வீட்டுக்கு வரவே இல்லை. அம்மாவிடம் 15ம் தேதி அவரது செல்போனுக்கு கால் செய்தேன். ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பிறகு 16ம் தேதி அம்மா இறந்து விட்டதாகத் மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது.
பிறகு நாங்க, மருத்துவமனையை அணுகி அம்மாவின் செல்போனை கேட்டோம். ஆனால், அம்மாவின் ஃபோன் தொலைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டார்கள். எங்க அம்மா செல்போனில்தான் போட்டோவும், வீடியோவும் உள்ளன.
இப்போதைக்கு எங்க அம்மா ஞாபகமா எனக்கு அந்த செல்போன் மட்டும் தான் உள்ளது. அதனால அது எனக்கு வேண்டும். யாராவது அந்த போனை எடுத்திருந்தாலோ அல்லது கண்டெடுத்தாலோ என்னிடம் கொடுத்து விடுங்கள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை துணை ஆணையருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், மருத்துவமனை அதிகாரிகளும் சிறுமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், சிறுமியின் தந்தை குஷல்நகர் போலிஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த குஷ்வந்த் கோலிபெயில் தெரிவித்தார்.