இந்தியாவில் கொரோனா வைரசின் உருமாற்றங்களை கண்டறிய மத்திய அரசு ‘இன்சாகாக்’ எனும் அறிவியல் ஆலோசனை அமைப்பை உருவாக்கியது. இதன் தலைவராக உலகப்புகழ்பெற்ற மூத்த வைராஜலிஸ்ட் ஷாகித் ஜமில் இருந்தார். தற்போது அவர் இந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அறிவியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனாவை மோடி அரசு கையாளும் விதம் குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டிய அவர், தடுப்பூசி தேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தேவை குறித்து வலியுறுத்தியிருந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து முழுமையான ஆய்வு செய்ய தேவையான தரவுகளை மத்திய அரசு தர மறுப்பதாக குறிப்பிட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 30ந்தேதி 800க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்ட போதும் ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை குறிப்பாக இரண்டாவது அலை பரவலை மோடி அரசு கையாளும் விதத்தை சர்வதேச ஏடுகள் பலவும் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவுக்கு பெருமளவு உதவியிருக்கக்கூடிய ஒரு குழுவிலிருந்து மூத்த விஞ்ஞானி விலகியிருப்பது மோடி அரசின் மீதான மறைமுக விமர்சனமே ஆகும்.
கொரோனா எனும் கொடுமையான நோய்த்தொற்றை அறிவியலின் வழி நின்றே சமாளிக்க முடியும். ஆனால் சுய தம்பட்டம், வெற்று விளம்பரம், கார்ப்பரேட் மருத்துவக் கம்பெனிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கான வாய்ப்பு, மக்களை பிளவுபடுத்தி மதவெறியை தூண்டுவது என்ற கோணத்தில்தான் மோடி அரசு கொரோனா பரவலை பார்க்கிறது. கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை மேலும் கொழுக்க வைப்பதில்தான் மோடி அரசு கவனம் செலுத்துகிறது.
மறுபுறத்தில் கும்பமேளா என்ற பெயரில் லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டுவது, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெருங்கூட்டத்தை கூட்டுவது என முற்றிலும் பொறுப்பற்ற வகையில் மோடி அரசு செயல்பட்டது. மறுபுறத்தில் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது, பசுஞ்சாணி குளியல் மூலம்கொரோனாவை தடுக்க முடியும் என அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் முற்றிலும் பொருந்தாத வகையில் இந்துத்துவா கூட்டம் பேசி வருகிறது. இந்த நிலையில்தான் அறிவியலாளர் ஒருவர் அரசின் பொறுப்பிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுள்ளார். அனைத்து விசயத்திலும் தோல்வி அடைந்துள்ள மோடி அரசு அறிவியலின் துணைகொண்டு கொரோனா தொற்றிலிருந்து மீள்வதிலிருந்தும் தோல்வியடைந்துள்ளது. இது ஆபத்தான போக்காகும்.