இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ரூத்ரதாண்டம் ஆடிவருகிறது. தினந்தோறும் 4 ஆயிரத்திற்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வருகிறது.
அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாததால் உரியச் சிகிச்சை கிடைக்காமலேயே பலர் உயிரிழந்து வருகின்றனர். சுகாதாரத்திற்கு வட மாநில அரசுகள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததே தற்போதைய நிலைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். இதையடுத்து இந்த மாவட்டத்தில் புதிதாக கொரோனா நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை கட்டப்பட்டது. இதில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கன மழையில், கொரோனா வார்டில் மழை நீர் கொட்டியதைப் பார்த்து நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், கொரோனா வார்டின் மேற்பகுதியிலிருந்து மழை நீர் அருவிபோல் கொட்டுகிறது. இது குறித்து நோயாளிகள் மருத்துவர்களிடம் கூறியபோது, தரையில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இதனால் கொரோனா நோயாளிகளே தண்ணீரை அகற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது.