கொரோனா இரண்டாவது அலை நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் பல குடும்பங்களை புரட்டிபோட்டுள்ளது. தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் இளைஞர்கள் பலரும் உயிரிழந்த சோகமும் நிகழந்துள்ளது. அந்தவகையில் டெல்லியில், கொரோனா சிகிச்சையின் போது பாடல் கேட்டு வைரலான இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சைப் பெற்று வந்த இளம்பெண் பாடல் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை பலரும் தன்னம்பிக்கை ஆத்மா என்று பாராட்டி வந்தனர்.
இந்த வீடியோவை டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் மோனிகா லங்கே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோ பதிவில், “30 வயதாகும் இவருக்கு ஐசியூ படுக்கை கிடைக்கவில்லை. ஆனால், ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் தைரியமான பெண்.
என்னிடம் பாடல்கள் கேட்க அனுமதி கேட்டார். பின்னர் நானும் அனுமதித்தேன். இதன்மூலம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், நம்பிக்கையை எப்பொழுதும் இழக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு அவருக்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவருக்காக வீட்டில் அவரின் குழந்தை காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இது பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய தினம் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மோனிகா வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் மோனிகா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாம் தைரியமான பெண்ணை இழந்துவிட்டோம்! அந்த பெண்ணின் இழப்பை அவரது குடும்பத்தாரும், அவரது குழந்தையும் தாங்கிக்கொள்ள வேண்டிக்கொள்ளுங்கள். அந்த பெண் தற்போது இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.