கொரோனாவின் இறுக்கமான பிடியில் உத்தர பிரதேச மாநிலம் சிக்கிக்கொண்டு மூச்சுவிட முடியாமல் திணறிவருகிறது. உ.பி மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், பசுக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் கவனம் செலுத்தியதால், தற்போது மருத்துவமனைகளில் படுக்கையும், ஆக்சிஜனும் கிடைக்காமல் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது என எல்லோரும் கூறி வரும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே இதை மறுத்து வருகிறார். மேலும் ஆச்சிஜன் தட்டுப்பாடே மாநிலத்தில் இல்லை என்றும், வேண்டுமென்றே பொய் கூறுகிறார்கள் எனவும், வதந்திகளை பரப்புவோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மக்களை மிரட்டும் வகையில் பேசினார்.
இந்நிலையில், மத்திய பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் கங்வார், உத்தர பிரதேச மாநிலம், பரேலி தொகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம் பரேலி தொகுதி பா.ஜ.க எம்.பியும், மத்திய அமைச்சருமான சந்தோஷ் கங்வார், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில்,பரேலி தொகுதியில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ உபகரணங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
மாநில சுகாதார துறையை மக்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் போனையே எடுப்பதில்லை. நேரில் சென்று ஆக்சிஜன் சிலிண்டர் கேட்பவர்களையும் அலைய விடுகின்றனர். இதனால் நோயாளிகள் கடுமையான இன்னலைச் சந்திக்கின்றனர். எனவே, பரேலி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரே தனது தொகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருப்பது உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கிறது.