சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்த ஐ.பி.எஸ் அதிகாரி கந்தசாமியை, லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் நண்பர் துளசிராம் பிராஜபதி ஆகியோரை குஜராத் போலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, தப்பிச்சென்றதாக கூறி மூன்று பேரையும் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவின் உத்தரவின் பேரில் இந்த போலி என்கவுண்டர் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சிபிஐ வசம் சென்றது. மேலும் இந்த விவகாரத்தில் பல அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கை சிபிஐ தரப்பில் இருந்து டிஐஜி கந்தசாமி விசாரணை நடத்தி இதில் உள்துறை அமைச்சராக இருந்தர் அமித்ஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக் கூறி, அமித்ஷாவை கைது செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஜாமினில் அமித்ஷா வெளிவந்தபிறகு, கடந்த 2018ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், போதிய ஆதரங்களை சிபிஐ தாக்கல் செய்யவில்லை எனவும் கூறியது.
இதனையடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 9 ஐபிஎல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாக கந்தசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.