கர்நாடக மாநிலம், குரதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகலா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால், உணவு விடுதிகளில் வேலை செய்து தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மேலும் சந்திரகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சந்திரகலா சிந்தாமணியில் இருந்து குரதஹள்ளி கிராமத்திற்குத் தனது மகளுடன் வந்துள்ளார். அப்போது அவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அப்போது அவரது மகள் தாயை எழுப்ப முயன்றபோது அவர் எந்த அசைவும் இன்றி அப்படியே இருந்துள்ளார்.
இதனால் அவரது மகள் அருகே இருக்கும் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் கொரோனா பரவல் அச்சத்தால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆம்புலன்ஸுக்கு அழைத்தபோது ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மண் அள்ளும் ஜே.சி.பி எந்திரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்த சந்திரகலாவின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்குப் பலர் தாங்களாகவே முன்வந்து உதவி செய்து வருகின்றனர். இருந்தபோதும், பல இடங்களில் கொரோனா பயத்தால் மக்களிடம் இருக்கும் மனிதநேயம் மறைந்து வருவதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்குக் காட்டுகின்றன.