தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து துவங்கி விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் மீண்டும் ஆளும் கட்சிகளே ஆட்சி அமைக்க உள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.கவை, தோர்கடித்து தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராகிறார். மேலும் பா.ஜ.க ஒரு இடத்தில் வெற்றி பெறவே போராடி வருகிறது.
அதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிக இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகவிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 165 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகிறார். அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அசாமில் பா.ஜ.க 78 தொகுதிகள் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அதேபோல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அசாம் மாநிலத்தை தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜ.க கடும் பின்னடைவை சந்திதுள்ளது.