தடுப்பூசிக்கு ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விலையை அறிவித்துள்ளது ஏன் என்றும் எதன் அடிப்படையில் தடுப்பூசி விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன எனவும் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 6 படி விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. தேசிய பேரிடர் காலத்தில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் எப்போது செயல்படுத்தப் போகிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பற்றாக்குறை தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது இந்த கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
பின்னர் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அடுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை எவ்வளவு என்பது குறித்தும், கூடுதல் உற்பத்திக்கான நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
அதே போல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவிர், ஃபெவிபிரவிர், மருத்துகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து வரும் வியாழக் கிழமைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்று தனியார் மருத்துவமனை சார்பாக இரண்டாவது முறையாக முறையிடப்பட்டது. சாந்தி முகுந்த் மருத்துவமனை வழக்கறிஞர், அரசு ஆக்சிஜன் ஏற்பாடு செய்வதாகக் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால், கிடைத்த பாடில்லை. நோயாளிகள் உயிரிக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு 2.69 டன் ஆக்சிஜன் உடனே வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.