ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்களை தினமும் பலியாக அனுமதிக்க முடியுமா என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஐந்தாவது நாளாக ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை இன்றும் நாடியுள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜரான தனியார் மருத்துவமனை வழக்கறிஞர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு இன்றும் நடந்ததை சுட்டிக்காடினர். பல நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் நிலை நீடிப்பதாகவும் தெரிவித்தனர்.
டெல்லியில் சுமார் 140 மருத்துவமனைகள் உள்ளன. தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று டெல்லி மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
480 மெட்ரிக் டன் பற்றாக்குறை டெல்லி மருத்துவமனைகளில் தினமும் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நீதிபதி இந்த 480 மெட்ரிக் டன் எப்போது டெல்லிக்கு வழங்கப்படும்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு மக்களை இப்படி தினமும் பலியாக அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.