பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது 7-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை ஒட்டி முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
பணவீக்க வீழ்ச்சி, தொழில்துறை வீழ்ச்சி, பணமதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி என 7 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மோடி அரசு. மேலும் வரி விதிப்புகளால் சீரழிவு, வேலைவாய்ப்பின்மை என மேலும், மேலும் பொதுமக்களை வறுமையின் பிடியில் தள்ளிவிட்டிருக்கிறது மோடியின் 7 ஆண்டுகால அரசு.
2016 பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலே சொன்னவைதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகள். பண மதிப்பிழப்புக்குப் பிந்தைய மத்திய பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு முடிவுகளும் தவறான திசையில்தான் இருந்தன.
தங்களுடைய கொள்கைகள், முடிவுகள், செயல் திட்டங்கள் தவறானவை என்பதை ஒப்புக்கொள்ள, ஏற்க மறுக்கிறது மத்திய மோடி அரசு. பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் மோடி பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருக்கிறார்.
இதனால் அய்யன் திருவள்ளுவரின் 488-வது திருக்குறளை மோடிக்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.
இடிப்பாரை இல்லாதஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங்கெடும். (கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்- மு.வ. உரை) இவ்வாறு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.