மத்திய பிரதேசத்தில் குறைந்துவந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 882 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இம்மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 220 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மாநில அரசு போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவும் 10 மாநிலங்களில் மத்திய பிரதேசம் பதற்றமான நிலையில் இருக்கிறது என்று மத்திய அரசே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களைப் பிடித்து சிறையில் அடைக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தூர் விமானநிலைய வளாகத்தில் உள்ள தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் சிலை முன்பு முகக்கவசம் அணியாமல் பா.ஜ.க அமைச்சர் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் பூஜை நடத்தியுள்ளார். இதில் விமான நிலைய இயக்குநர் ஆர்யாமா சன்யாஸ் உட்படபலர் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.க அமைச்சரின் இந்த செயலை பார்த்த விமான பயணிகள் அதிர்ச்சியடைந்து, முகக்கவசம் அணியாமல் அமைச்சர் எப்படி விமான நிலையத்திற்குள் இருக்கலாம் எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அமைச்சர் உஷா தாக்கூர் பெரும்பாலும் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் காணப்படுகிறார் என பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இதுகுறித்து அவரிடம் சட்டமன்ற அமர்வின் போது கேள்வி எழுப்பியதற்கு, தினமும் தான் ஹனுமான் மந்திரத்தை சொல்வதால் மாஸ்க் அணியத் தேவையில்லை என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சரியாக முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக இரண்டு போலிஸார் அவரை நடுரோட்டில் கீழே தள்ளி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியது. ஆனால் தற்போது அமைச்சரே முகக்கவசம் அணியாமல் விமான நிலையத்திலேயே பூஜை நடத்தியுள்ளார். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு? சாமானியர்கள் என்றால் ஒரு சட்டம் அமைச்சர் என்றால் ஒரு சட்டமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.