இந்தியா முழுவதும் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்குச் சேர விரும்பும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு இதுநாள் வரை உயர்கல்வியில் சேர்ந்து படித்துவந்தனர். இதனால் ஏழை எளிய மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
ஆனால், மாணவர்களின் உயர்கல்வியைச் சிதைக்கும் விதமாக மோடி அரசு தொடர்ச்சியாகக் கல்வி மீது தாக்குதலை நடத்தி வருகிறது. புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்து பள்ளி முதல் உயர்கல்வி வரை எழை, எளியவர்களின் கல்விக் கனவைச் சிதைத்து வருகிறது.
ஏற்கனவே மருத்துவ கல்விக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைத்துப் பல மாணவர்களின் உயிரையும் காவு வாங்கியது மோடி அரசு. தற்போது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உட்பட நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 41 பல்கலைக் கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த உயர்கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு ஜூன் இறுதியில் நுழைவுத் தேர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி தெரிவித்துள்ள மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் கரே, புதிய கல்வி கொள்கை படி மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் சேர்க்கை பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உட்பட மத்திய பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப் பரிந்துரைத்துள்ள நிபுணர் குழு ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்திடலாம் என்று தெரிவித்துள்ளது.
புதிய கல்வி கொள்கையை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளும் பொது நுழைவுத் தேர்வானது, குறிக்கோள் வகை மற்றும் விரிவான பதில் எழுதல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.