மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இம்மாநிலத்தில் இதுவரை 29 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 57 ஆயிரத்து 74 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 11,163 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. மும்பை நகரில் இதுவரை 4,52,445 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவு விடுதிகள், திரையரங்கங்கள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காகச் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனையின் வரவேற்பறை பகுதியில் இருக்கும் நாற்காலிகளை அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர். பிறகு வரவேற்பறை பகுதியை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.