உத்தரகாண்ட் மாநிலம், பிலங்கனா அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஏழு நண்பர்கள் காட்டுக் கோழிகளை வேட்டையாடுவதற்காக, அருகே இருக்கும் சோழா டோக் எனும் காட்டுப்பகுதிக்குக் கடந்த சனிக்கிழமையன்று சென்றுள்ளனர்.
நண்பர்கள் ஏழு பேரும் வரிசையாகக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ராஜீவ் சிங் என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அப்போது அவரது கையில் வைத்திருந்த வேட்டை துப்பாக்கி திடீரென வெடித்ததில், அருகே இருந்த சந்தோஷ் பன்வார் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்து நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ராஜீவ் சிங் நண்பனை கொன்றுவிட்டோமே என பதறிஅடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மற்ற நண்பர்கள் சந்தோஷின் உடலை கிராமத்திற்குக் கொண்டு வந்து, நடந்த விஷயத்தைக் கூறினர்.
பின்னர், சந்தோஷின் உயிரிழப்புக்கு தாங்கள் தான் காரணம் என்ற மன அழுத்தத்திலிருந்த அர்ஜூன் சிங், பன்கஜ் சிங், சோபன் சிங் ஆகிய மூவரும் விஷம் குடித்துள்ளனர். இதை அறிந்த கிராம மக்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவிதுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ராஜீவ் சிங்கை தேடி வருகின்றனர். நண்பர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.