இத்தனை காலமும் மக்கள் நலனுக்கு பேருதவியாக இருக்கும் திட்டங்களை ஒரே நாடு என்ற பெயரில் ஒன்றிணைத்து அதனை கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் செயல்பாட்டுகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அதே போன்று பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, அரசு வங்கிகளை இணைப்பது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களை அல்லல்பட வைத்தது மத்திய பாஜக அரசு. அவ்வகையில் கடந்த ஆண்டு இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏதும் எதிர்வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு செல்லாது எனும் தகவல் அண்மை நாட்களாக பரவி வருகிறது.
அதனால் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, “ வங்கிகள் இணைப்பால் மென்பொருள் இணைக்கும் பணிகள் நடந்து முடிந்தும் சில நடைமுறை சிக்கல்கள் நீடித்து வருகிறது.
அதனால் வங்கிகளின் IFSC மற்றும் MICR போன்றவை மாற்றம் பெற்றுள்ளன. ஆகவே புதிய காசோலைகளை கிளைகளுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய காசோலைகளின் செயல்பாடு உடனே நிறுத்தப்படாது. ஏப்ரல் 1க்கு பிறகு வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். முறையான அறிவிப்பு வெளியிட அவகாசம் எடுத்துக்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.