இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வாரங்களான வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தினந்தோறும் அதிகரித்து வருவதால், மத்திய அரசு இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவி வருவதாக தெரிவித்துள்ளது.
முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாததால்தான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கூறிவருகின்றன.
அதேசமயம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள், 144 தடை உத்தரவு உள்ளிட்டவை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் 2ஆவது அலை ஆபத்தானதாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் விரைவில் ஒரு நாளைக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கூட கொரோனா பாதிப்பு இருந்தால் கூட ஆச்சரியப்பட வேண்டாம். ஏனென்றால், 1918 ம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது பிரேசிலில் ஏற்பட்ட சமீபத்திய 2வது அலையாக இருந்தாலும் சரி. இரண்டாவது அலைகள் எப்போதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியைப் புறக்கணிப்பது மிகவும் ஆபத்தானது” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மருத்துவர்களும் கொரோனா வைரஸ் 2வது அலை ஆபத்தானது என எச்சரிக்கை செய்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸின் மூன்று அலைகளைக் கடந்து நான்காவது அலையின் பிடியில் உலகம் தற்போது உள்ளது. இதில் தற்போது நான்காவது அலையின் ஆரம்ப நிலையில் அமெரிக்கா இருக்கிறது.
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளில் தற்போது மூன்றாம் அலை அடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து 2ஆவது அலை என்ற நிலைக்குள் சென்றிருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.