மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சமீபகாலமாகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. அதே நேரம் இந்த இழப்பைக் காரணம் காட்டி, ஏர் இந்தியாவை ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியையும் பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக நஷ்டத்தைக் காரணம் காட்டி ஏர் இந்தியாவிடம் அரசு வசம் இருக்கும் 100 சதவீத பங்குகளையும் தனியாரிடமே கொடுத்துவிடுவது என்ற நிலைக்கு மோடி அரசாங்கம் சென்றுள்ளது. எனவே ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புவோர் விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில் தற்போது நிறுவனத்தை வாங்குவோர்க்கு அதிக அளவில் சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.60,074 கோடி கடன் உள்ளது. மேலும் ரூ.23,286.5 கோடியை அந்த நிறுவனத்தை வாங்குவோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இதன் காரணமாகவே அந்த நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
5 முறை அறிவிக்கை வெளியிட்டும் தனியார் முதலாளிகள் யாரும் இதனை வாங்குவதற்கு முன்வரவில்லை. ஒவ்வொரு முறையும் தோல்வியிலேயே முடிந்தது. இதையடுத்து, ‘ஏர் இந்தியா’வை மட்டுமன்றி, அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில், லாபத்தில் இயங்கும் துணை நிறுவனத்தையும், மத்திய அரசுக்கு உள்ள 100 சதவிகிதப்பங்குகளையும் விற்பனை செய்யத் தயார் என்று மோடி அரசு அறிவித்தது.
அதன்பின்னர், கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 6-வது முறையாக விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு பலனும் கிடைத்தது. ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் தற்போது ‘விஸ்தாரா’, ‘ஏர் ஏசியா இந்தியா’ ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ‘டாடா குழுமம்’ மற்றும் நாட்டின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து மற்றும் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ஸ்பைஸ் ஜெட்’ ஆகியவை முன்வரிசையில் நிற்கின்றன.
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தைக் கைப்பற்ற, மீனாட்சி மாலிக் தலைமையிலான தற்போதைய ‘ஏர் இந்தியா’ ஊழியர்கள் குழு மற்றும் இண்டரப்ட்ஸ் பண்ட்ஸ் கூட்டணியும் விண்ணப்பம் அளித்திருந்தது. ஆனால், தகுதி இல்லை என்ற காரணத்தைச் சொல்லி, ஏர் இந்தியா ஊழியர்கள் குழு உட்பட எஸ்ஸார், பவன் ரூயாவின் டன்லப், பால்கன் டயர்ஸ் ஆகிய நிறுவனங்களின் விருப்ப விண்ணப்பங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் 64 நாட்களுக்குள் ஏலத் தொகையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர்ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதா அல்லது தனியார்மயமாக்க வேண்டாமா?’ என்ற நிலையைத் தாண்டி, தற்போது, ‘தனியார்மயமாக்குவது அல்லது நிறுவனத்தை மூடுவது’ என்ற கட்டத்திற்கு வந்துள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி பேசியுள்ளார். இது நாட்டுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.