இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து சொந்த நாட்டில் இருந்ததை விட உலகின் பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்ததே நரேந்திர மோடியின் இமாலய சாதனை என்ற கருத்து இதுகாறும் தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு வெளி நாடுகளிலேயே நித்தமும் முகாமிட்டு வந்த பிரதமர் மோடியை உலக மக்களை போன்று முடக்கிய சாதனை கொரோனாவையேச் சேரும். அவ்வகையில் உலகில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் வெளி நாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே நரேந்திர மோடி இருந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுபோக, பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பயணிப்பதற்காக பிரத்யேகமாக சுமார் 8,400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் போயிங் 777 விமான சேவை தொடங்கப்பட்டும் மோடி எங்கும் செல்ல முடியாதபடி கொரோனாவால் கட்டப்பட்டு இருந்ததால் இது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அண்டை மாநிலமான வங்க தேசத்துக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானத்தில் சென்றுள்ளார்.
அந்நாட்டின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக சொகுசு விமானத்தில் சென்றிருக்கிறார் மோடி. கொரோனா தொற்றால் திடீர் ஊரடங்கால் மீள முடியாமல் நாட்டு மக்கள் சிக்கி சின்னாபின்னமாகி உள்ள நேரத்தில் சொகுசு விமானத்தில் மோடி பயணித்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில், மேற்கு வங்கத்தில் இருந்து சைக்கிளில் சென்றிருந்தால் கூட வங்கதேசத்தை எளிதாக அடைந்திருக்கலாம். அதற்காக 8000 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானத்தில் சென்றிருப்பது தன்னுடைய பகட்டை வெளிப்படுத்துவதற்காகே மோடி செய்திருப்பார் போலும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் இந்திய குடிமகனாக இருந்து வெளி நாடுகளிலேயே சுற்றித்திருந்தவரை 15 மாதங்களாக எங்கும் செல்லவிடாமல் தடுத்த கொரோனாவையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.