இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை குறைந்து காணப்பட்டது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 262 ஆக பதிவாகியிருக்கிறது. கொரோனா தொற்றால் இந்தியாவில் ஒரேநாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், நாடு தாங்காது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
இது குறித்து ரிசவர் வங்கியின் மாதாந்திர அறிக்கையில், துணை ஆளுநர் மைகேல் தெபபிரதா பத்ரா கூறுகையில், “இந்தியாவில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதிலிருந்து தற்போதுதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறோம்.
இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் போன்ற நிலை உண்டாகினால் அதன் பாதிப்பை இந்தியா நிச்சயம் தாங்காது.
மேலும், ரிசர்வ் வங்கி கணிப்புப்படி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி 26.2 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் மிகக் குறைவு. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும்’’ என தெரிவித்துள்ளார்.