இந்தியாவில் 2020 மார்ச் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை தணிந்து காணப்பட்டது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் தினசரி 10 முதல் 15 ஆயிரம் வரை தொற்றாளர்களின் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 30, 35, 40, 45 ஆயிரம் என கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 715 ஆக பதிவாகியிருக்கிறது.
குறிப்பாக, மகராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று அதிகரித்தபோது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்போது மீண்டும் ஒருவருடம் கழித்து அதே மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், "மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. 70% அளவுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும் எனவும், பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.