உத்தரகாண்ட் மாநிலம், காஜியாபாத் மாவட்டத்திற்குட்பட்ட, தஸ்னா கிராமத்தில் இந்து கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் குடிநீர் குடிப்பதற்காக, இஸ்லாமியச் சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். இதைப் பார்த்த வலதுசாரிகள் சிலர் சிறுவனைத் தாக்கி கோயிலிருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்து யுவா வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள், டேராடூனில் உள்ள 200க்கும் மேற்பட்ட கோயில்களில், இந்து அல்லாதவர்கள் கோயில்களில் நுழையத் தடை என்று குறிப்பிட்டு பேனர்கள் வைத்துள்ளனர்.
இதனை அறிந்த காவல்துறையினர், கோயில்களில் வைக்கப்பட்ட அறிவிப்பு பேனர்களை உடனடியாக அகற்றுமாறு இந்து யுவா வாகினி அமைப்புக்கு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் சில கோயில்களில் மட்டும் பேனர்களை அகற்றிவிட்டு, மற்ற இடங்களில் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இந்து யுவா வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து, இந்து யுவா வாகினியின் பொதுச் செயலாளர் ஜீது ரந்தாவா, "இதுபோன்ற சுவரொட்டிகளை நகரத்தில் வைக்க வேண்டாம் என்று போலிஸார் அச்சுறுத்தினார்கள். அவர்கள் ஏன் இப்படி முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள்? உத்தரகாண்ட் போன்ற ஒரு இடத்தில் இது நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் என் மீது வழக்குப் பதிவு செய்தாலும் எனக்கு கவலையில்லை, ஆனால் உத்தரகாண்ட் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கு வெளியேயும் இந்த அறிவிப்பை வைக்கப்போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சியில் இந்துத்வ அமைப்பினர் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை பகிரங்கமாக காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் உத்தரகாண்ட் முதல்வராகப் பதவியேற்ற தீரத் சிங் ராவத், பெண்கள் ஜீன்ஸ் அணிந்து நம் கலாச்சாரத்தை கெடுப்பதாகப் பேசினார். இதற்குப் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது கருத்திலிருந்து பின்வாங்கினார். இப்படி தொடர்ச்சியாக உத்தரகண்ட் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள், பெண்கள் மீது வெறுப்புணர்வைக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.