கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.
இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.
இந்த விமர்சனங்களை, உண்மையாக்கும் விதமாக ப்ளும் பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தொழிலதிபர் அதானி உலக பணக்காரர்களைக் காட்டிலும் தனது சொத்து மதிப்பை 2021ம் ஆண்டில் 3.6 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், உலகின் முதலிடத்தில் உள்ள பணக்காரர் என்ற இடத்துக்குப் போட்டியிட்ட அமேசானின் ஜெஃப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2020ம் ஆண்டிலிருந்து கொரோனா தாக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பு மட்டும் எப்படி அதிகரித்துள்ளது என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதானி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது குறித்த நாளேடு செய்தியைப் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், “2020ஆம் ஆண்டில் உங்கள் சொத்து எவ்வளவு அதிகரித்தது? கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் வாழ்க்கையை வாழவே போராடினீர்களே? ஆனால், அதானி, ரூ.12 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். இதன் மூலம் அதானியின் சொத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏன் அதிகரித்தது எனச் சொல்ல முடியுமா?” எனத் தெரிவித்துள்ளார்.