நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என பா.ஜ.க அரசு அறிவித்து நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்தி வருகிறது.
ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடியாத நிலையை ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு, பல மாணவர்களின் உயிரையும் குடித்துள்ளது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டு முதல் பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு கட்டாயம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்விற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது செவிலியர் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “படித்து முடித்ததும் வேலைவாய்ப்பை பெற்று குடும்பத்தை பார்த்துக் கொள்ள நினைக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் பிள்ளைகளுக்கு செவிலியர் படிப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படிப்புக்கும் நீட் கட்டாயம் என்பது மத்திய அரசின் அதிகாரத்திமிரையும்-ஆணவத்தையும் காட்டுகிறது.
எம்.பி.பி.எஸ் படிக்க நீட் கட்டாயம் என்று 14 உயிர்கள் போக காரணமானவர்கள், அந்தக் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி செவிலியர் படிப்புக்கும் நீட் அவசியம் என்று சொல்வதை ஏற்க முடியாது. இது மாணவ - மாணவியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இந்த அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.