பெங்களூருவில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வருபவர் ஹிட்டேஷா சந்திரனே. இவர் மார்ச் 9ம் தேதி ஸொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, உணவு வருவதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆர்டர் செய்த உணவை ரத்து செய்யுமாறு ஸொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது, ஸொமேட்டோவில் பணியாற்றும் காமராஜ் என்பவர் ஹிட்டேஷா ஆர்டர் செய்த உணவு கொடுக்க வந்துள்ளார்.
அப்போது, ஹிட்டேஷாவுக்கும், காமராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் ஹிட்டேஷாவை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து ஹிட்டேஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஹிட்டேஷா,"ஆர்டர் செய்த உணவை தாமதமாக கொண்டு வந்ததால், உணவை மீண்டும் எடுத்துச் செல்லுமாறு கூறினேன். ஆனால், அவர் முடியாது என்று என்னைப் பார்த்து கோபமாக பேசினார். மேலும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதனால் என் பாதுகாப்புக்காக செருப்பை கையில் எடுத்தேன். அப்போது அவர் என் முகத்தில் அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய காமராஜ், "ஹிட்டேஷா என்னை செருப்பால் தாக்க முயன்றதால், தற்காப்புக்காகத் தடுத்தபோது, அவர் கதவில் மோதிக் கொண்டதால் மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள ஸொமேட்டோ நிறுவனம், இதுகுறித்து போலிஸார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது எனவும், இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்பதாகவும் ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.