மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லைப் பகுதிகளான திக்ரி, சிங்கு, ஹாஜிப்பூர் உள்ளிட்ட இடங்களில் தங்களின் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் 100 நாளை எட்டியுள்ளது.
இதனிடையே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 11 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் பெருகிவருகிறது. மேலும், டெல்லியின் எல்லைப் பகுதியில், டிராக்டர்களை வீடுகளாக மாற்றி அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்பான போராட்டத்தில் ஆண்களுக்கு, நிகராக பெண்களும் களத்தில் இருக்கின்றனர். பெண்கள் ஏன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற கருத்து வந்தபோது, "நாங்களும் ஆண்களுடன் வயல்களில் உழைக்கிறோம். நாங்கள் விவசாயிகள் இல்லையென்றால் நாங்கள் யார்?" எனக் கேள்வி எழுப்பி, வேளாண் சட்டத்திற்கு எதிராகப் பெண்களும் ஆண்களுடன் கைகோர்த்து போராட்டக் களம் கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல அமெரிக்க ஆங்கில இதழான டைம், மார்ச் மாத இதழின் அட்டைப்படத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் "விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள்" என தலைப்பிட்டு பெருமை சேர்த்துள்ளது. டைம் இதழின் இந்த அட்டைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.